நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

Monthly Archives: March 2018

31-03-2018 (Thamil Sevai-1043)

எல்லாம் நன்மைக்கே!

பல்லவ நாட்டை இராஜவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.

அந்நாட்டு அமைச்சர் எப்பொழுதும் எது நடந்தாலும், வருத்தப்படாமல் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அரசரும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தவறுதலாகக் கத்தி அரசனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

அந்தசமயம் அமைச்சர் வழக்கம்போல், அரசே..! எல்லாம் நன்மைக்கே! என்றார்.

இதைக் கேட்ட அரசன் நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். நீர் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாயா? என்று கோபத்துடன் கத்தினார்.

உடனே, காவலர்களிடம்..

அமைச்சரை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டார்.

காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர்.

அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்று கூறினார்.

நாட்கள் பல கடந்து சென்றது.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் ஒரு நாள் தனியாகக் காட்டிற்குச் சென்றார்.

அப்போது அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அரசன் அவர்களிடம் சிக்கிக் கொண்டார்.

அங்கு இருந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்து பார்த்தார்.

பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவர்களை மட்டுமே பலியிட முடியும். இவனுக்கோ சுண்டுவிரல் பாதியாக வெட்டுப்பட்டுள்ளது. அதனால் இவனை விட்டு விடுவோம் என்று கூறி அரசனை விடுவித்தார்கள்.

அரசன், அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டார்.
நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் கூறினார். சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை உணர்ந்தேன் என்றார்.

அதற்கு அமைச்சரும், அரசே என்னை நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னை சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னை சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.

*நீதி*: எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 41

30-03-2018 (Thamil Sevai-1042)

‌இது எனதல்ல

‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.

‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?’ என்று ஞானி கேட்டார்.

‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.

‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.

‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.

‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.

‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.

‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார்.

சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.

‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’

‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா…..???’

‘இல்லை’

‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்…..???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்…….???’

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார்.

‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்….

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 24

29-03-2018 (Thamil Sevai-1041)

அறிவோ அறிவு

ஒரு சீடன், குருவைப் பார்த்துக் கேட்டான் .

“குருவே.. நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளை மீறியவன் ஆவேனா..?”

“இல்லையே.. தாராளமாகச் சாப்பிடலாம்” என்றார் குரு.

உடன், சீடன் கேட்டான்.
“கூடவே, ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் தவறா குரு ?”

“அதிலொன்றும் தவறில்லை. சாப்பிடலாம்.” என்றார் குரு.

மறுபடியும் சீடன் கேட்டான்..

“அவற்றுடன் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?”

“ஒரு குறையும் இல்லை” என்றார் குரு.

அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்.

“இம்மூன்றையும் சேர்த்துதான் பேரிச்சம்பழ மது தயாரிக்கப்படுகிறது. அதை மட்டும் ஏன், நான் அருந்தக்கூடாது என்கிறீர்கள்” என்றான்.

குரு கேட்டார்..

“கைப்பிடி மண்ணை அள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?”

“வலிக்காது” குருவே என்றான்.

“அதன் மீது சிறிது நீரை ஊற்றினால். . ?” குரு கேட்டார்.

“அதுவும் வலிக்காது” என்றான்.

குரு அமைதியாகச் சொன்னார்..

“இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி, வேகமாக உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?”

“என் தலை பிளந்துவிடும் குருவே” என்றான்.

“உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டதா” என்றார் குரு.

“கிடைத்து விட்டது. மன்னித்து விடுங்கள் குருவே” என்றார் சீடன்.

*நீதி* : அறிவை நல்ல விஷயங்களுக்காக மட்டும் உபயோகப்படுத்துவோர் , எளிதில் வெற்றி பெறுவர்.
தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 19

28-03-2018 (Thamil Sevai-1040)

அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் பற்றி இன்றைய நற்றிணை ஒலிப்பேழையில் அறிந்துகொள்ளலாம், (Universal Postal Union)


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே 

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.

கடவுள் அவன் தவத்தை, மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.

‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.

கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.

சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள்.

‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’ என்றான்.

‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.

அப்படியே செய்தான் பக்தன்.

அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான் ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு துறவி வந்தார், ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத்தான்’ என்றார்.

பக்தன் தெளிவடைந்தான்.

*நீதி* : மற்றவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உன் நிலையில், உறுதியாய் இருந்தால், வெற்றி உனதே..

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 28

27-03-2018 (Thamil Sevai-1039)

 

எண்ணமே எல்லாம்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,

”நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்’ என அவரை அழைத்தார்கள்…!

ஞானியோ, “இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை” என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,

”எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?”

என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் ஞானியே’ என்றனர்.

”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதிகளில் முழுகும் போதெல்லாம் ,

இந்த பாகற்காயையும் முழுக்கி, என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லோருக்கும் ஒரு துண்டு கொடுத்தார்..!

“புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்.. இப்போது சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும்..” என்றார்…!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள், அதை வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !

“தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…”என்றனர் ஞானியிடம் ஏமாற்றத்துடன்.

“பார்த்தீர்களா….?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும், அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே ,

நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும் , துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்…

எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,

எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ சென்று 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்….

அதனால், எந்த பயனும் வந்து விடப் போவதில்லை..

மாற்றங்கள்,
மனங்களிலும், குணங்களிலும், ஏற்பட்டால் தான் வாழ்க்கை இனிமையாகும்” என்றார் அந்த ஞானி.

*நீதி* : புண்ணியம் தேடி அலைய வேண்டாம். எண்ணங்களை செம்மைப்படுத்தினால், எல்லாம் தானாக வந்து சேரும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 15

26-03-2018 (Thamil Sevai-1038)

முட்டாள்தான் புத்திசாலி 

ஒரு கிராமத்தில், ஒரு பொருளாதார அறிஞர் இருந்தார். பல நாட்டு மன்னர்கள், அவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுச் சென்றனர்.

ஒருநாள், ஊர்த்தலைவர் அவர் முன் வந்து நின்று, கிண்டலாகச் சொன்னார்.

“ஐயா! அறிஞரே!

நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே!

தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று கேட்டால், வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.

அறிஞர் மிக வருத்தமடைந்தார்.

பையனை அழைத்துக் கேட்டார்.

“தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்

”தங்கம்”

அறிஞர் கேட்டார்.

”பிறகு ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்.

“தினமும் நான் பள்ளி செல்லும்போது, அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு, என்னை அறிஞரின் மகனே என நக்கலாக அழைத்து ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ” என்பார்.

நான் வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் என்னைப் பார்த்து சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.

நான், அந்த நாணயத்துடன் அங்கிருந்து சென்று விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம்தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது.

நான், தங்கம் என்று சொல்லி, தங்க நாணயத்தை எடுத்திருந்தால், அன்றோடு இந்த விளையாட்டு நின்றிருக்கும்.

என்னை கேலி செய்யும் நோக்கில் இவ்வாறு செய்ததால், நானும் அவர்களிடம் சுயநலமாக நடந்து கொண்டு தினம் ஒரு நாணயத்தை பெற்று வந்தேன்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வாழ்க்கையில், பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம். இதைப் பார்த்து மகிழும் சிலர், தாங்கள் வென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது, நாம் வென்றிருப்போம் தந்தையே!” என்று பதிலளித்தான்.

இதைக்கேட்டு அறிஞருக்கு திகைப்பு ஏற்பட்டாலும், அவனது அறிவாற்றலைக் கண்டு மெச்சினார்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 26

25-03-2018 (Thamil Sevai-1037)

 திருச்சி – திருவாணைக்கோவில் – பொதுநூலகத்தில் 24-3.2018 அன்று நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவின் சில பகுதிகள் இன்றைய நற்றிணையின் ஒலிப்பட்டியலை அலங்கரிக்கின்றன: 

நீ எதுவோ? அதுவும் அதுவே

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

‘என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.

என் பணியாட்கள்கூட எனக்கு மதிப்பு கொடுப்பதில்லை.

என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளனர்.

எல்லோரும் என்னிடம் தகராறு செய்கின்றனர். இங்கு யாருமே சரியில்லை‘ என்றார்.

புன்னகைத்த குரு, ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறை இருக்கும் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார்.

அப்போது, அந்த அறைக்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.

அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி ஆனந்தமாக விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான்.

தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்கள் இருப்பதுபோல கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன்,

ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின.

உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இவற்றைக் கண்ட குரு, அந்த செல்வந்தரிடம் “பார்த்தாயா… இப்படித்தான் வாழ்க்கையும்.. இந்த குழந்தையைப் போல் நடந்து கொள்.. முடிந்தவரை எல்லோரிடமும் புன்னகையுடன் பழகு. சொர்க்கம் உனதாகும்” என ஆலோசனை கூறிவிட்டு சென்றார்.

*நீதி* : நாம் எதை வெளிப்படுத்துகிறமோ, அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

தொகுப்பு : வேலுச்சாமி

Hits: 40

24-03-2018 (Thamil Sevai-1036)

 

அரவணைப்பு 

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
,
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது…
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,…..

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

*நீதி* :

இந்த மரத்தினை போன்றவர்களே, நம் பெற்றோரும்.. தனிக்குடித்தனம் இருக்கும் பிள்ளைகளுக்கு, தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும்கூட,

கடைசி வரை அவர்கள் எதிர்பார்ப்பது நம்முடைய
பாசமும்.., அன்பும்..,
அவ்வப்போது வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்பதும் மட்டுமே..

இதை செய்வோமா..?

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 35

23-03-2018 (Thamil Sevai-1035)

தற்பெருமை

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார்.

அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், “சட்’டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.

குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், “ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்’ என்று கூறத் தொடங்கினான்.

இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.

அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், “”என்னை ஆற்றில் தள்ளிவிடு!” என்றார்.

அந்த சீடன் திகைத்தான்.””ம்! தள்ளு!” என்றார் குரு.

“அது… வேண்டாம் குருவே!” என்றான் சீடன்.
“இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்… என்னை ஆற்றில் தள்ளு!” என்றார்.

மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.

மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர். ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.

அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.

குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
“இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?” என்று கேட்டார்.

அந்த சீடன் தலை குனிந்தான்.

“ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல்.

ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!” என்றார் குரு.

தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

*நீதி* :

தற்பெருமை கூடாது.
நீங்கள் மலையாக இருப்பினும், மண்கும்பம் என உணர்வு கொள்வது நலம் பயக்கும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 62

22-03-2018 (Thamil Sevai-1034)


மௌனத்தின் வலிமை (22-03-2018)

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார்.

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது.

அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.

‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.

இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.

கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான்.

சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.

இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை.

அப்போதுதான் மகனுக்கு புரிந்தது தந்தையின் நோக்கம்.

*நீதி* : துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார் கடவுள்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 32

21-03-2018 (Thamil Sevai-1033)


நரி வால்

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.

அதில் ஒரு நரி, ஒருநாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வால் இல்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. “அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்…..???” என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.

அது, வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.

என்னடா, இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.

உடனே இரண்டாவது நரி “ஏன்டா நீ என்ன லூசா” என்று கேட்டது.

உடனே இது “அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற” என்று சொல்லியது.

இரண்டாவது நரி “அது எப்படின்னு?” என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, “உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா.. அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்” என்று கூறியது.

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.

ஆனால் முதல் நரி அமைதியாக “இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்” என்று சொன்னது.

இதைக்கேட்ட மற்றொரு நரி, “அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அநியாயமாக ஏமார்ந்து விட்டோமா” என நினைத்து கண்ணீர் விட்டது..

*நீதி* : கடவுள் பெயரை கூறி மட்டுமல்ல. எல்லா வழிகளிலும் ஏமாற்றக்கூடிய கும்பல் இங்கே அதிகம்.. விழிப்புடன் இருந்தால் மட்டுமே உன்னை நீ காத்துக் கொள்ள முடியும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 41

20-03-2018 (Thamil Sevai-1032)


பிரச்சினைகள் பெரிதல்ல

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன்.

நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.

எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஐடியா கேட்டான்.

அதற்கு, “எதுக்குப்பா நீ கஷ்டப்படனும்.. இதுக்கெல்லலாம் சேர்த்துதான நாம அரசனுக்கு வரி கட்டுறோம். நேரா, அவர்கிட்ட போய் புகார் கொடுத்திடு. அதுக்கப்புறம், முயலைப் பிடிக்க நீ கஷ்டப்பட வேண்டியதில்ல. அவங்க பார்த்துக்குவாங்க” என பக்கத்து வீட்டுக்காரன் ஆலோசனை சொன்னான்.

அதன்படி அந்த உழவன் அரசனிடம் சென்றான்.

“அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான்.

சிரித்த அரசன் “ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?” என்று கேட்டான்.

“அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோ கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை” என்றான் அவன்.

“நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்” என்றான் அரசன்.

மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான்.
அரசனுக்கும், வீரர்களுக்கும் சிறப்பான விருந்துக்கு உழவன் ஏற்பாடு செய்தான்.

விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் “இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்” என்று வேட்டையாடப் புறப்பட்டான்.

வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள். வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.

அதைப் பார்த்த அரசன், “அந்த முயலைத் தப்ப விடாதீர்கள், பிடியுங்கள்” என்று கத்தியபடி வேலிப் பபக்கம் ஓடினான்.

வேட்டைக்காரர்களும் வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.

தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது.

வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவனிடம் காட்டினான் அரசன்.

உழவனோ..

இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான்.

ஒரு முயல் என்ன, ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும், தனது வயலில் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேனே” என்று வந்திருந்தான் அந்த உழவன்.

*நீதி*: சின்ன பிரச்சனைகளுக்கு பெரியமுடிவு எடுக்ககூடாது..!
அடுத்தவரின் ஆலோசனைகளை, சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 35

19-03-2018 (Thamil Sevai-1031)


எதிரிதான் நண்பன் 

ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனது பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் வசித்தான்.

வேட்டைக்காரனிடம், சில வேட்டை நாய்களும் இருந்தன.

அவை, அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி, தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.

மீண்டும் ஒருமுறை நாய்கள் இதேபோல, வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்றார்.

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

குழந்தைகளுக்கு, தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

*நீதி* : நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது. எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வதே நலம் பயக்கும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 40

18-03-2018 (Thamil Sevai-1030)


மாத்தி யோசி

குதிரைகளை நேசிக்கும் மன்னர் ஒருவர், ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே மிகச் சிறந்த மரபைச் சார்ந்த இரண்டு குதிரைகளைப் பார்த்தார்.

அவற்றில் எது சிறந்த குதிரையோ, அதைத் தன்னுடையதாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு விருப்பம்..

எனவே, அந்த இரண்டு குதிரைகளையும் ஓட வைத்து, எது வேகமாக ஓடி, இலக்கை முதலில் எட்டி, பந்தயத்தில் ஜெயிக்கிறதோ, அதையே வாங்க வேண்டும் என்று தன் மந்திரியிடம் சொன்னார்.

பந்தயம் தொடங்கியது.

என்ன ஆச்சரியம்..!

இரண்டு குதிரைகளும் மெள்ள அன்ன நடை நடந்தனவே தவிர, எதுவும் வேகமாக ஓடவில்லை; ஒன்றை ஒன்று முந்தவில்லை. எனவே, பந்தயம் சலிப்பைத் தருவதாக இருந்தது.

விசாரித்துப் பார்த்ததில், அந்தக் குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் இருவருமே தங்கள் குதிரையை மிகவும் நேசிப்பதாகவும், பந்தயத்தில் ஜெயித்துவிட்டால் வேறு வழியின்றி மன்னருக்குத் தங்கள் குதிரையை தாரைவார்த்துத் தரவேண்டுமே என்பதால், அவர்கள் தங்கள் குதிரையை மெதுவாகச் செலுத்துகிறார்கள் என்றும் மந்திரிக்குத் தெரிந்தது.

உடனே அவர், ”பந்தயத்தில் ஒரு சின்ன மாற்றம் செய்கிறேன். இவரின் குதிரையை அவர் செலுத்தட்டும்; அவரது குதிரையை இவர் செலுத்தட்டும்!” என்று உத்தரவிட்டார்.

தனது சொந்த குதிரையை இழந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடும் பதைபதைப்போடும் அவர்கள் இருவரும் தாங்கள் சவாரி செய்யும் குதிரையை வேகமாகச் செலுத்துவார்கள் அல்லவா? அப்போது எது நல்ல குதிரை என்பது எளிதில் புலனாகிவிடும் என்பது மந்திரியின் கணக்கு.

மீண்டும் போட்டி தொடங்கியது. மந்திரியின் கணக்குபடியே நடந்தது.

முதலில் வந்த குதிரை, மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.

*நீதி* : எந்த செயலிலும் வெற்றி பெற, வித்தியாசமான சிந்தனை அவசியம்!

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 82

  • 174,125
  • 58,980
நேயர் கருத்து