கந்தர்வகோட்டையில் குழந்தைகள் தினவிழா

Jpeg

நவம்பர்-14, 2017 அன்று காலை திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள செங்கிப்பட்டி என்ற ஊரிலிருந்து தெற்கு நோக்கிய நமது பயணத்தின் 18-வது கிலோமீட்டரில் கந்தர்வகோட்டையை அடைந்தோம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒரு குடும்பப் பெண்ணின் பாங்கோடு நம்மை சிரித்துக்கொண்டே வரவேற்றது. காலை நேர உற்சாகத் துள்ளலோடு ஓடித்திரிந்த மாணவிகள் நமது பள்ளிப்பருவ நினைவுகளை பளிச்சிடச் செய்தார்கள்.

இன்முகத்தோடு வரவேற்ற தலைமையாசிரியையிடம் நற்றிணைபற்றிய ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் காண்பித்தோம்.நற்றிணையின் வாட்ஸப் மூலமான சேவையை வெகுவாகப் பாராட்டிய தலைமையாசிரியை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

  

சீருடையில் அணிவகுத்து நின்ற மாணவிகளின் இனிய குரலில் இறைவணக்கம் இழையோடியது. செய்திவாசிப்பு, பொதுஅறிவு, சிந்தனைத் துளிகள் இப்படி மாணவியரின் பங்களிப்பு மெய்சிலிர்க்கச் செய்தது.

   

தொடர்ந்து நடந்த குழந்தைகள் தினவிழா சிறப்பு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாட்ஸப் வழியாக நற்றிணை நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நற்றிணை பற்றிய சிறு அறிமுக உரையை திரு.ஞானப்பிரியன் அவர்கள் வழங்கினார். மாணவிகள் தங்கள் திறமையை உலகத் தமிழர்களிடையே கொண்டுசெல்ல நற்றிணை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். நற்றிணைக்கும் இப்பள்ளிக்கும் இணைப்பை ஏற்படுத்தித் தந்த இப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு,கருப்பையா மற்றும் திரு,தவப்புதல்வன் சசிகுமார் இருவருக்கும் நற்றிணை நேயர்கள் சார்பாக நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

 

மாணவிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாணவிகளே ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சிகளை மாணவி சங்கீதா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியைப்போல் தொகுத்து வழங்கினார். மாணவிகளின் அபரிமிதமான பேச்சுத் திறமையால் விழா களைகட்டியது. 12-ம் வகுப்பு மாணவி ஜோதிகாவின் ஆக்ரோஷமான மற்றும் யதார்த்தமான பேச்சு அனைவரையும் விழிவிரிய வைத்தது.

 

இம்மாணவியின் பேச்சுத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு தலைமையாசிரியை அறிவித்த சிறப்புப் பரிசும், தமிழாசிரியை வழங்கிய 500 ரூபாயும் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.. ஆசிரிய-ஆசிரியைகளின் வாழ்த்துரைகளும் வழிகாட்டுதல்களும் மாணவியரால் கைதட்டி வரவேற்கப்பட்டது.

 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பள்ளி ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் போட்டிகளுக்கு பரிசுகளை நன்கொடையாக அளிக்க நற்றிணைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நற்றிணை ஒலிபரப்பில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டு நற்றிணை அறக்கட்டளைக்கு நேயர்கள் அளிக்கும் தொகையை கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு தந்து உதவுவதாக நற்றிணை இயக்குனர் உறுதியளித்தார்.

எனவே, அன்புள்ளம் கொண்ட தமிழ் உள்ளங்கள் நற்றிணை இணைய தளத்தில் உள்ள – நிதிஉதவி அளிக்க -என்ற பகுதியில் அறிவித்துள்ள நற்றிணை அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி மாணவிகளின் திறமையை மேம்படுத்த உதவுவதோடு, தொகை செலுத்திய விவரத்தை info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

சிறுதுளிதான் பெருவெள்ளம்.

என்றும் தமிழ்ப்பணியில்
-நற்றிணைக் குழு-

Hits: 333